கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 1/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

மேற்கு நோக்கிப் பயணிக்கப் போவதாகக் கட்டுரை எழுதி ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டது. அப்படியோர் ஆசைப் பட்டு அதற்கான வேலைகளைத் தொடங்கியது அதற்கு ஓராண்டுக்கு முன்னால். மேற்குதான் என்றில்லை; எங்காவது போய் விட்டால் நல்லது என்று துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தேன் (என் பயணக் கட்டுரைகள் அனைத்தையும் படித்து முடிக்காமல் "வெளிநாட்டு மோகம்" என்று ஓரிரு வார்த்தைகளில் கதையைச் சுருக்கி விடாதீர்கள். அது ஒரு பெரும் கதை. அதைச் சுற்றி எத்தனையோ கிளைக் கதைகள் இருக்கின்றன. அவையனைத்தையும் பற்றிப் பேசத்தான் இந்தத் தொடர்!). நினைத்தபடி எதுவுமே நடக்காது என்று கடுப்பாகிக் கொண்டிருந்த வேளையில் வந்ததுதான் சிங்கப்பூர் வாய்ப்பு. இதற்கு முந்தைய பயணத் தொடர் அது பற்றியதே. யாரோ ஒரு முகம் தெரியாத புண்ணியவான் புண்ணியத்தில் ஆனந்த விகடன் வலைத்தளத்தில் 'சிறந்த பதிவுகள்' (GOOD BLOGS) பகுதியில் வெளியிடப் பட்டு இன்றுவரை என் இடுகைகளில் அதிகம் படிக்கப் பட்டது அதுவாகத்தான் இருக்கிறது. அதுதான் பயணக் கட்டுரைகள் எழுதக் கிடைத்த மிகப்பெரும் ஊக்கம். சிங்கப்பூர் பற்றி எழுதியபோது எல்லாமே இந்தியாவுடன் ஒப்பிட்டு எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். அடுத்த முறை, சொல்லவே வேண்டியதில்லை. எல்லாத்தையுமே இந்தியாவுடனும் சிங்கப்பூருடனும் ஒப்பிட்டேதான் பேசுவேன்.

சிங்கப்பூர் சென்றபோது எத்தனை நாளில் திரும்ப வேண்டுமோ எவ்வளவு நாள் இருக்கப் போகிறோமோ என்கிற தெளிவில்லாமலே சென்றேன். அங்கேயே இருந்து விடுகிற மாதிரி சூழ்நிலை உருவானால் பின்னர் குடும்பத்தை அழைத்துக் கொள்ளலாம் என்று தனியாகச் சென்றேன். இம்முறையும் அதே மாதிரியான குழப்பத்துடனேயே கிளம்ப வேண்டிய சூழல். ஆனால், எப்படியிருந்தாலும் பரவாயில்லை என்று குடும்பத்தையும் அழைத்துக் கொண்டே கிளம்பி விட்டேன். சொந்தச் செலவில்தான். உடனடியாகத் திரும்பினால் அவர்களுக்கு ஒரு சுற்றுலா போல் இருந்து விட்டுப் போகட்டும்; அங்கேயே இருக்கிற மாதிரி ஆனால் துணையில்லாமல் தனியாகப் பயணிக்க வேண்டிய சிக்கல்கள் இராது அவர்களுக்கு என்று எண்ணி அப்படிச் செய்து விட்டேன். அது மட்டுமில்லை, இது சிங்கப்பூர் போலத் துணையில்லாமல் வரும் அளவுக்குக் குறைவான தொலைவும் இல்லை. பிரிந்திருக்கும் சங்கடங்களும் இராது இல்லையா?!

மாலை நான்கு மணிக்கு மேல் பயணம் உறுதியானது. இரவு எட்டு மணிக்குத்தான் குடும்பத்துக்குட் டிக்கெட் போடும் வேலை முடிந்தது. கிளம்புவது மறுநாள் காலை பத்து மணிக்கு. வெளி நாட்டுக்குச் செல்வதற்கென்று பல சாமான்கள் வாங்க வேண்டுமே. அதெல்லாம் எதுவும் முடியவில்லை. எட்டு மணிக்கு மேல் என்னென்ன முடியுமோ அவற்றை மட்டும் வாங்கிக் கொண்டு பெட்டிகளைக் கட்டினோம். உறுதியாகத் தெரியும் வரை எதையும் வாங்கி வீண் போக வேண்டாம் என்றும் முடிவு செய்து வைத்திருந்தோம். போவோம் போவோம் என்று நம்பிக் கெட்ட கதைகள் ஒன்றிரண்டு அல்ல. பல. அதனால் இம்முறை கடைசிவரை நம்பிக்கையில்லை. மிக நெருங்கிய உறவினர் - நண்பர்களுக்கு அழைத்துச் சொல்ல வேண்டுமே. அதுவே ஓர் இருபது-முப்பது பேர் இருந்தார்கள். எல்லோருக்கும் பட படவென அழைத்துச் சொல்லி விட்டு, இரவெல்லாம் மூட்டைகள் கட்டினோம். தூக்கம் துளியளவுதான். மகளுடைய பள்ளியில் கூட தெளிவாக எதுவும் சொல்ல முடியவில்லை. மறுநாள் கிளம்பும்போதுதான் அழைத்துச் சொன்னோம்.

அதிகாலையிலேயே எழுந்து அவசர அவசரமாகக் கிளம்பி விமான நிலையம் வந்து சேர்ந்தோம். குடும்பத்துக்கு முதல் வான்வழிப் பயணம். முதல் வெளிநாட்டுப் பயணம். மனைவிக்குக் கடைசி வரை நம்பிக்கையில்லை. "புலி வந்து கடித்த பின்தான் நம்புவேன்!" என்றாள். மகள், இலண்டன் போகிறோம் என்பதை நம்பவே மாட்டேன் என்றாள். நம்பவில்லை என்பதைவிட விரும்பவில்லை. அப்படியென்ன வெறுப்பு என்கிறீர்களா? பயம். அப்படியென்ன பயம் என்கிறீர்களா? அது ஒரு கதை. அதை அப்புறம் சொல்கிறேன். அந்த விருப்பமின்மையை - பயத்தைத்தான் நம்பிக்கையின்மையாக வெளிப்படுத்தினாள். அடுத்து இன்னொரு பயம். எலி பயம்-ஒலி பயம் மாதிரி அவளுக்கு வானத்தில் பறக்கும் விமானம் என்றாலும் பயம். என்னைப் போல பயந்த சுபாவம், பாவம்! அவளைச் சரிக் கட்டுவது வேறு ஒரு பெரிய வேலையாக இருந்தது. இலண்டன் வந்து சேரும்வரை சிங்கப்பூர்தான் போகிறோம் என்று அவளே அவளுக்குச் சொல்லிக் கொண்டாள். எங்களையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாள். சரியென்று ஏற்றுக் கொண்டோம். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் "இலண்டன் போகிறோம்", "இலண்டன் போகிறோம்" என்று பொய் சொல்லி - வம்பிழுப்பது போல் சொல்லிச் சொல்லி, கொஞ்சம் கொஞ்சமாக அவளையும் தயார் படுத்தினோம்.

டிக்கெட் போட்டிருந்தது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ். ஏறி அமர்ந்ததும் வெள்ளை வெளேரென்று இருந்த பொம்பளைப் பிள்ளைகளைப் பார்த்ததும் கொஞ்சம் மகிழ்ச்சியாகி விட்டாள். அவர்கள் நன்றாகப் பேசியதும் இன்னும் மகிழ்ச்சியாகி விட்டாள். போகிற போக்கில் சில பொம்மைகளை கொடுத்துச் சென்றார்கள். அதைப் பார்த்து விட்டு இன்னும் மகிழ்ச்சியாகி விட்டாள். ஆக, ஒரு பிரச்சனை தீர்ந்தது. இடையில் துபாயில் இறங்கி விமானம் மாறிப் பயணிக்க வேண்டியிருந்தது. அப்போது அவள் போட்ட ஒரே ஒரு நிபந்தனை - "குண்டுப் ப்ளேனாக இருந்தால் வர மாட்டேன். ஒல்லிப் ப்ளேனாக இருக்க வேண்டும்!" என்பது மட்டுமே. ஆக, விமானம் மீதான பயம் ஓரளவுக்குத் தீர்ந்தது. துபாயில் மாறிய பின் மீண்டும் ஒரு பொம்மை கொடுத்தார்கள். அத்தோடு அந்த பயம் முழுமையாகத் தீர்ந்தது. மிச்சமிருப்பது ஒரேயொரு பயம்தான். அது இலண்டன் பயம். அதைத்தான் அப்புறம் பேசுவோம் என்று சொல்லி விட்டேனே.

பெங்களூருக்கும் துபாய்க்கும் இடையிலான பயணம் இனிதாக இருந்தது. மொத்தமே மூன்று-மூன்றரை மணி நேரம் என்பதால் சிரமம் ஏதும் இல்லை. பெங்களூரில் இருந்து இலண்டன் செல்லப் பல வழிகள் இருக்கின்றன. ஒன்று, நேரடியாகப் போய் இறங்கி விடுவது. இன்னொன்று, துபாய் வழி. மூன்றாவது டெல்லி வழி. மேலும் பல வழிகளும் இருக்க வேண்டும். பெங்களூர்க்காரர்கள் பெரிதும் விரும்புவது துபாய் வழி என்றெண்ணுகிறேன். நாமும் அவ்வழியே. பெங்களூருக்கும் துபாய்க்கும் இடையிலான பயணத்தில் கூட்டம் அவ்வளவாக இருக்க வில்லை. பயணம் பெரும்பாலும் கடல் மேல்தான். "தரை மேல் பிறக்க வைத்தாய். எங்களைக் கடல் மேல் பறக்க வைத்தாய்!" என்று அவ்வப்போது பாடிக் கொண்டேன். துபாயை நெருங்கும் முன் அவர்கள் நாட்டுத் தரைக் காட்சிகள் அருமையாக இருந்தன. சிங்கப்பூர் சென்றபோது இப்படி ஏதும் சிறப்பான காட்சிகள் கிடைக்கவில்லை.

பாலைவனங்கள் என்றாலே காய்ந்த நிலப்பரப்புதான் நம் நினைவில் வருகிறது. அவை மேலேயிருந்து பார்க்கையில் அவ்வளவு அழகு. முன்பு போல் சன்னல் அருகில் இருக்கை பிடித்து எட்டி எட்டிப் பார்க்கவும் வேண்டியதில்லை. ஒவ்வொரு இருக்கையிலும் இருக்கும் காட்சிப் பெட்டிகளில் விமானத்தின் முன்புறம், அடிப்புறம், பின்புறத்தில் இருந்து என்று பல்வேறு விதமான கோணங்களில் பார்த்து ரசிக்க முடிகிறது. இன்று தொழில் நுட்பம் நமக்களித்திருக்கும் வசதி - அதைப் பார்க்க விமானம் பிடித்துச் செல்ல வேண்டியதில்லை. இருந்த இடத்தில் இருந்தே GOOGLE MAPS போய்ப் பாருங்கள். மிகவும் விரும்பி ரசிப்பீர்கள். ஆனால், அதில் கிடைக்காத பல காட்சிகள் விமானத்தில் இருந்து பார்த்தபோது கிடைத்தது என்பதையும் சொல்லியாக வேண்டும். ஆனாலும், பெரும்பாலான காட்சிகள் கிடைக்கும். முயன்று பாருங்கள். இந்த உலகத்தில் இவ்வளவு அழகு இருக்கிறதா என்று எனக்கு ஆச்சரியம். அழகை ரசிக்கவே தெரியாத எனக்கே இவ்வளவு என்றால் உங்களைப் போன்றோருக்கு எப்படி இருக்குமோ தெரிய வில்லை.

துபாயில் இறங்கி மாறும் வேளையில் நான் கவனிக்க முயன்ற ஒரு முக்கியமான விஷயம் - நம் மலையாள சகோதரர்கள் எவ்வளவு பேர் கண்ணில் தட்டுப் படுகிறார்கள் என்பது. அந்த மத்தியான நேரத்தில் அவர்கள் அனைவரும் ஊருக்குள் பிசியாக இருந்திருக்கக் கூடும். ஆனாலும் விமான நிலையத்துக்குள்ளேயே ஒரு சிலரைக் காண முடிந்தது. திருவனந்தபுரத்தில் - கொச்சியில் எவ்வளவு சாதாரணமாக அலைவார்களோ அதே மாதிரி சாதாரணமாக அலைந்து கொண்டிருந்தார்கள். தேங்காய் எண்ணெய் தேய்த்த தடித்த மம்மூட்டி-மோகன்லால் மீசைகளுடன்!

துபாய் வெயில் (மத்திய கிழக்கு வெயில் என்று சொல்லலாம்) எவ்வளவு கொடுமையானது என்றும் பார்த்து விட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. ஆனால், விமான நிலையத்துக்குள்ளேயே எல்லாம் முடிந்து விட்டதால் அதை உணர முடியவில்லை. வெயிலோ குளிரோ மனிதர்கள் ஏற்கனவே அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அங்கே என்னாலும் - எந்நாளும் வாழ முடியும் என்பது என்னுடைய ஒரு தீர்க்கமான நம்பிக்கை. அதனால், பிரச்சனையில்லை. இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம். அது மட்டுமில்லை. நான் வெயிலோடு விளையாடிய மண்ணும் கிட்டத்தட்ட துபாய் வெயிலுக்கு அருகில் வரும் என்று நினைக்கிறேன்.

குளிர் நிறத்தைக் கூட்டும்; வெயில் குறைக்கும் என்பது என் புரிதல். அதன்படி பார்த்தால், வெள்ளையர்கள் வெள்ளையாக இருப்பதும் ஆப்பிரிக்கர்கள் கறுப்பாக இருப்பதும் நாம் நடுப்பாக(!) இருப்பதும் சரியென்றுதான் படுகிறது. அப்படியானால், நம்மை விட வெயில் அதிகமாக இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் மக்கள் ஏன் நம்மை விட நிறம் கூடுதலாக (கூடுதல்-குறைவு என்று பேசுவதே தப்பு என்று யாராவது கண்டிக்கக் கூடும். மன்னித்தருள்க!) இருக்கிறார்கள்? இதுதான் என்னுடைய இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் கேள்வி.

மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்தே வேற்றுக் கலாச்சாரத்தைக் கண்டு அச்சமுறும் பண்பு எல்லா இனங்களிலுமே இருந்திருக்கிறது. இவர்கள் - அவர்கள் என்றெல்லாம் இல்லை. இது எல்லா இனக்குழுக்களிலும் இருக்கும் பண்புதான். எனக்கும் அந்த பயம் ஓரளவு உண்டு என உணர்கிறேன். இளமைப் பருவம் முழுக்க முஸ்லிம் நண்பர்களோடே இருந்து பழகிய ஆள் நான். ஆனால் அவர்களோடு உணவு, உடை, உருவ வேற்றுமைகள் ஏதும் எங்களுக்கு இருந்ததில்லை. இப்போதுதான் ஏதேதோ சொல்கிறார்கள். துபாயில் விமானம் மாறிய பொழுதில் சில முகங்களைப் பார்த்துக் கொஞ்சம் பயம் உண்டானது. ஒரு குறிப்பிட்ட விதமான முகத்தில் ஒரு குறிப்பிட்ட விதமான தாடி என்னை எப்போதுமே பயமுறுத்துகிறது. இதை யாரும் தவறாக எடுத்துக் கொண்டு கடிந்து கொள்ள வேண்டாம். சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் - இந்த பயம் எங்கள் தெருவில் இருக்கும் அப்துல் ரகுமான் மாமாவையோ என் நண்பன் செய்யதுவையோ பார்க்கும் போது வருவதில்லை. அது போலவே வெள்ளைக்காரர்களைப் பார்க்கும் போது வரும் ஒருவித பயம் - அந்நிய உணர்வு, மத்திய கிழக்கு மாந்தர்களைக் காணும்போது வருவதில்லை. இப்போது சரியாகப் புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதைச் சொல்லியிருக்க வேண்டியதில்லை. 'அதென்ன திருட்டுத்தனம்?' என்று தோன்றியதால் எழுதி விட்டேன். இப்போதெல்லாம் எல்லோருமே கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுகிறார்கள் - அதே எல்லோருமே அதே கருத்துச் சுதந்திரத்தைக் கழுத்தை நெரித்துக் கொல்லவும் செய்கிறார்கள். அதனால், இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கெஞ்ச வேண்டியாகி விட்டது. புரிந்து கொண்டு உலக அமைதிக்கு ஊறு விளைவிக்காமல் இருந்தால் நலம்.

துபாயில் இருந்து இலண்டன் வந்த பயணமும் அருமை. அதே மாதிரி வெள்ளை வெளேர் பிள்ளைகள். என் மகளுக்கு மிகவும் பிடித்து விட்டது (எனக்குமா?!). முன்பு சொன்னபடி, மீண்டும் ஒரு பொம்மை கொடுத்தார்கள். போகும்போது வரும்போதெல்லாம் சிரித்துச் சிரித்துக் கொஞ்சிப் பேசினார்கள். அதனால், இறங்கும்போது அவர்கள் எல்லோரையும் விரட்டி விரட்டி 'பாய்ய்ய்' (BYE!!!) சொன்னாள். பெங்களூரில் இருந்து துபாய் வந்த பாதை பெரும்பாலும் கடலுக்கு மேலும் சிறிது தரைக்கு மேலும் இருந்தது போல, இந்தப் பயணம் பெரும்பாலும் தரைக்கு மேலும் சிறிது கடலுக்கு மேலும் இருந்தது. தரைக்கு மேலான பயணம் முழுக்க அழகான அழகு. பாலைவனத்திலும் அழகுண்டு என்கிற வாழ்க்கைத் தத்துவத்தை எனக்கு உணர்த்திய பயணம் இது. பூமியில் அழகு என்பது என்ன? மேடு பள்ளங்கள்தாமே! மலைகளும் பள்ளத்தாக்குகளும்தாமே! யாராவது எப்போதாவது சமவெளிகளை அழகென்று சொல்லியிருக்கிறார்களா? மணல் மேடுகளும் மலை போன்ற அமைப்புகளும் அவ்வளவு அழகாக இருந்தன. இதுவரை நான் பூவுலகில் அழகென்று அனுபவித்தவை மிக மிகக் குறைவு. அதில் முதல் இடமோ முதன்மையான சில இடங்களில் ஒன்றோ இந்தப் பயணத்தில் கண்ட காட்சிகளுக்குக் கண்டிப்பாக உண்டு. இந்த வழியில் பயணம் செய்து பழக்கமுள்ளவர்கள் இதை ஒத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். அல்லது, என் சுவையில் குறையாக இருக்கும். ஒருவேளை இப்பாதையில் அடிக்கடி பயணித்தும் இதுவரை இதைக் கவனித்ததில்லை என்றால், அடுத்த முறை தவறாமல் கவனியுங்கள்.

வண்டி முழுக்க துபாய் முகங்கள் அதிகம் இருந்ததால் அந்நியமாகவும் படவில்லை. நம்மை விட இலண்டனுக்கு அருகில் இருப்பவர்கள் என்பதால் இலண்டனில் அவர்களும் அதிகம் இருப்பார்கள் என்று முடிவு செய்து கொண்டேன். வெள்ளைக்காரர்கள் ஒரு சிலரே இருந்தனர். வெயிலும் விமானமும் நீயா நானா என்று முந்திக் கொண்டு கிட்டத்தட்ட ஒரே வேகத்தில் பயணித்தன. கடைசியில் இயற்கை வென்றது. இலண்டனில் இறங்கும் வேளையில் இருட்டி விட்டது. "ஓ! இறங்குறதே இப்போதுதான் நடக்குதா?!" என்று நினைக்கிறீர்களா? அதுதானே (வழவழா கொழகொழா) நம்ம பாணி. பொறுத்திருங்கள். அடுத்த பகுதியில் ஊருக்குள் நுழைந்து விடுவோம். அல்லது, நுழைய முடிகிறதா என்று பார்ப்போம்! :)

-தொடரும்...

கருத்துகள்

  1. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    1995 ல் இருந்து பதிவு எழுதுகிறீர்களா? நீங்க பெரிய சாதனையாளர்தான்.

    பதிலளிநீக்கு
  2. 1995 ல் இருந்து பதிவு எழுதுகிறீர்களா? Congrats
    Bharathiraja

    பதிலளிநீக்கு
  3. It is nice to know you have gone with your family. Have a wonderful time! How is the little one enjoying the snow and sights?

    பதிலளிநீக்கு
  4. @பழனி.கந்தசாமி- நன்றி ஐயா. இந்தக் கேள்வியை நிறையப் பேர் கேட்டு விட்டார்கள். நான் 95 முதல் எழுதுகிறேன். ஆனால் பதிவுலகில் அல்ல. அவையெல்லாம் என் நாட்குறிப்பில் இருந்து அந்தந்தத் தேதிகளில் பதிவுக்கு ஏற்றியவை. ப்ளாக்கர் பழைய தேதியில் இடுவதற்கான வசதி கொடுக்கிறது. :)

    பதிலளிநீக்கு
  5. @சமுத்ரா- நன்றி நண்பா. கந்தசாமி ஐயா அவர்களுக்குக் கொடுத்திருக்கும் பதிலைப் படித்து விடுங்கள். உண்மை புரிபடும்.

    பதிலளிநீக்கு
  6. @Zephyr- Thank you. Sure. She is enjoying the snow and everything. I will write about them in the next few posts. :)

    பதிலளிநீக்கு
  7. நான் ஏதோ நீங்கள் அலுவலக விஷயமாக லண்டன் சென்றீர்கள் என்று நினைத்தேன். லண்டடனில் செட்டிலாக வாழ்த்துகள். பூமியில் அழகு மேடு பள்ளங்கள்தான்- பயணக்கட்டுரையில் பிலோசபி! மிக அருமை!

    பதிலளிநீக்கு
  8. சார், வணக்கம். அலுவலக விசயமாகத்தான் சென்றேன். செட்டில் ஆகச் சிறிது வாய்ப்பு இருந்தது. அதனால்தான் குடும்பத்தை என் செலவிலேயே அழைத்துச் சென்றேன். ஆனால் நினைத்தபடி ஏதும் நடக்கவில்லை. எனவே குடும்பத்தோடு இப்போது ஊர் திரும்பி விட்டேன். ஆனாலும் கட்டுரை தொடரும். :)

    உங்கள் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி, சார்.

    பதிலளிநீக்கு
  9. "தரை மேல் பிறக்க வைத்தாய். எங்களைக் கடல் மேல் பறக்க வைத்தாய்!" என்று அவ்வப்போது பாடிக் கொண்டேன்.

    கலாச்சார வியப்புடன் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  10. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே. இலண்டன் பற்றிய பயணக் கட்டுரை பாதியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர வேண்டும் என்பதற்கான நினைவு படுத்தலாகவும் ஊக்கமாகவும் இதை எடுத்துக் கொள்கிறேன். மீண்டும் நன்றிகள். சாவகாசமாக ஒருநாள் உங்கள் பதிவுகளையும் வாசித்து உரையாட வருகிறேன். அதுவரை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  11. நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே.

    பதிலளிநீக்கு
  12. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி, அருள் அவர்களே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி